[vc_row][vc_column][vc_single_image image=”673″ img_size=”full” alignment=”center”][vc_single_image image=”672″ img_size=”full” alignment=”center”][vc_column_text]
பெரம்பலூர் மற்றும் சுற்றுப்புற ஊர்களின் சிறப்புகள்
பெரம்பலூர்
பெரும்புலியூர் என்பது மருவி பெரம்பலூர் என்பதாக பெயரெடுத்தது. முற்காலத்தில் பெரம்பலூர், பெரும் வனப்பகுதியாக இருந்துள்ளது. புலிகளும், சிறுத்தைகளும், கரடிகளும் வாழ்ந்தன. அழகிய மலைகளும், மலை சூழ்ந்த பகுதிகளும் நிறைந்த இடம் இன்று முயல் மான்களை தவிர வேறு எந்த மிருகங்களையும் காணமுடிவதில்லை. 1970 வரை வேட்டை பிரியர்கள் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் இங்குதான் வருவார்கள். புகழ் பெற்ற பச்சைமலை இங்கிருந்து தான் ஆரம்பம் ஆகிறது.
ஸ்ரீ வியாக்ரதபாத முனிவர் பெரும்புலியூரிலிருந்த புலியங்குளத்தில் (தற்போது தெப்பகுளம்) தவம் இருந்ததாகவும், அருகில் உள்ள ஸ்ரீ மதனகோபால சுவாமி கோவிலில் இறை வழிவாடு செய்ததாகவும் சொல்லப்படுகிறது. பஞ்சபாண்டவர்கள் தங்களுடைய அஞ்ஞாத வாச காலத்தில் அருகிலுள்ள லாடபுரம்(விராடபுரம்) கிராமத்தில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள மலையில் வசித்தனர். அதற்கான அடையாளங்கள் இன்றும் அங்கே உள்ளன. அவர்கள் ஸ்ரீ மதனகோபால சுவாமி கோவிலுக்கு தினந்தோறும் வந்து இறைவனை வழிபட்டனர். கோவிலில் அவர்கள் நட்டு வைத்த நந்தியாவட்டை செடி பல்லாயிரக்கணக்கான வருடங்களாக இன்றும் பசுமையாக உள்ளது அதிசயம் தான்.
மேலும் அந்தச் செடி கண் நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. பஞ்ச பாணடவர்கள் பெரம்பலூர் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் தங்களுடைய குலதெய்வமான ஸ்ரீ காசி விஸ்வநாதர் விக்ரகத்தை அவர்களே பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகவும் வரலாறு உண்டு.
பெரம்பலூர் ஏரிக்கு நீர் வரத்திற்காக வெள்ளையர்கள் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட ஜார்ஜ் வாய்க்கால் இன்று பராமரிப்பின்றி பெரும் பகுதி அழிந்து கொண்யட வருகிறது. புகழ்பெற்ற ஸ்ரீ நீலியம்மன், ஸ்ரீ வெள்ளந்தாங்கி அம்மன் கோவில் இங்கு உள்ளது. இங்கு ஐந்து கலை கல்லூரிகள், ஏழு பாலிடெக்னிக் கல்லூரிகள், ஏழு பொறியியல் கல்லூரிகள், இரண்டு தொழில் நுட்ப பயிற்சி நிறுவனங்கள் மற்றும் விவசாயம், செவிலியர், முடநீக்கியல், கல்வியியல் கல்லூரிகளும் மற்றும் மருத்துவக் கல்லூரியும் இப்பகுதியில் நடைபெற்று வருகின்றன.
குரும்பலூர்
குரும்புலியூர் என்பது குரும்பலூர் என்றானது. மூலக்காடு மற்றும் பச்சை மலை போன்ற மலைகள் சூழ்ந்த அழகிய ஊர். அதிக மக்கள் தொகை கொண்ட இவ்வூர் பேரூராட்சி அந்தஸ்து பெற்றது. இவ்வூர் சிவன் கோவில் மற்றும் பெருமாள் கோவில் மிக தொன்மையானது. இங்குள்ள மிக சிறப்பு வாய்ந்த ஸ்ரீ ஆப்பூரான் கோவில் சுவாமியை வழிபடும் பக்தர்கள் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் வசிக்கின்றனர். சிறிய வெங்காயம் மாநிலத்திலேயே இப்பகுதியில் மிக அதிகமாக விளைவிக்கப்படுகிறது. இதன் துணை கிராம்மான கு.பாளையத்தில் புகழ் பெற்ற கிறித்துவ தேவாலயம் உள்ளது. பாரதிதாசன் பல்கலைக்கழகம் நடத்தும் அரசு கலைக்கல்லூதி இவ்வூரில் (துறையூர் சாலையில்) உள்ளது.
லாடபுரம்
இவ்வூர் பெரம்பலூரில் இருந்து 14 கி.மீ தொலைவில், பெரம்பலூர் – துறையூர் சாலையின் மிக அருகில் உள்ளது. புகழ் பெற்ற பச்சைமலை இங்குள்ளது. முற்காலத்தில் இது விராடபுரம் என அழைக்கப்பட்டது. பஞ்ச பாண்டவர்கள் தங்களுடைய அஞ்ஞாச வாசம் (தலைமறைவு வாழ்க்கை) காலத்தில் இங்குள்ள அடர்ந்த வனப்பகுதிகள் நிறைந்த பச்சை மலையில் வசித்தனர். அதற்கான அடையாளங்கள் இன்றும் உள்ளன. இம்மாவட்டத்தில் உள்ள ஒரே அருவியான மயிலூற்று இங்குதான் உள்ளது. விவசாயம் செழிப்பான ஊர். சிறிய வெங்காயம், நெல் உற்பத்தி இங்கு அதிகம்.
சிறுவாச்சூர்
சிறுவாச்சூர் மிகவும் புகழ் பெற்ற ஆன்மீக தலமாகும். இங்கு அமைந்துள்ள ஸ்ரீ மதுரகாளி அம்மன் கோவில் உலக புகழ் பெற்றது. கண்ணகி, மதுரையை எரித்து விட்டு ஆவேசம் அடங்காமல் வடக்கு நோக்கி வந்ததாகவும், இரவு இவ்வூரில் அதன் முன்னரே இருந்த ஸ்ரீ பெரியசாமி ஆலயத்தில் தங்கியதாகவும், அவ்விடத்தே இருந்து அராஜகம் செய்து வந்த அரக்கணை அழித்து, மக்களுக்கு பாதுகாப்பு அளித்தால், அம்மன் இங்கேயே தங்கிவிடலாம் என்றும், தான் (ஸ்ரீ பெரிய சுவாமி) அருகில் உள்ள மலைக்கு சென்று குடியேறி விடுவதாகவும் கூற, அன்றிரவே அங்கு வந்த அரக்கன், ஸ்ரீ அம்மனால் அழிக்கப்பட்டான், அதன் பின்னர் ஆவேசம் தனிந்த கண்ணகி ஸ்ரீ மதுரகாளி அம்மன் என்ற பெயரோடு சிறுவாச்சூரிலேயே, நிரந்தரமாக அமர்ந்து அருள்பாலித்து வருகிறார்.
சமயபுரம் போன்று இக்கோவிலும் மிகவும் புகழ் பெற்றது. இதன் குடிமக்கள் (பக்தர்கள்) இன்று உலகின் பல பகுதிகளிலும் வசித்து வருகின்றனர். காஞ்சி பெரியவர் என்று அழைக்கப்படும் அமரர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களுக்கு, சிறுவாச்சூர் ஸ்ரீ மதுரகாளி அம்மன் தான் குலதெய்வமாகும். இக்கோவிலில் தங்கதேர் இழுக்கும் வைபவம் சிறப்பான ஒன்று. தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்கள் காலத்தில் இக்கோவில் கட்டப்பட்ட பழமையான கோவில், எல்லாவற்றையும் விட சிறப்பு என்னவெனில், கேரளத்தில்(காலடி) பிறந்து இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இந்து மதத்தை பரப்பிய ஸ்ரீ சங்கர மரத்தின் முதல் மடாதிபதி ஸ்ரீ ஆதி சங்கரர் இந்த பகுதியில் விஜயம்செய்தபோது அவரால் ஸ்தாபிதம் செய்யப்பட்டததுதான் இக்கோவிலில் உள்ள அம்மன் சிலை. இது சிறந்த சுற்றுலா தளம் ஆகும். பெரம்பலூரில் இருந்து திருச்சி செல்லும் வழியில் 8 வது கி.மீ-ல் நெடுஞ்சாலை 45-ல் உள்ளது.
செட்டிகுளம்
செட்டிக்குளம் மலை மீது அமைந்துள்ள ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கோவில் புகழ் பெற்ற ஸ்தலம். இங்கு குடிகொண்ட ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமி கையில், வேலுக்கு பதில் இனிக்கும் கரும்பை வைத்திருப்பார். இக்கோவிலுக்கு வடபழனி என்றும் பெயர். தமிழகம் முழுவதும் இதற்கு பக்தர்கள் உண்டு. மலைக்கு மேலேயே கார் போன்ற வாகனங்கள் செல்ல வசதி உண்டு. சிறிய வெங்காய விளைச்சலில் இந்தியாவிலேயே இப்பகுதிதான் முதலிடத்தில் உள்ளது. இங்குள்ள சிவன் கோவிலும் (ஸ்ரீ ஏகாம்பரேஸ்வர்ர் ஸ்வாமி) சோழ மாமன்னர்களால் கட்டப்பட்ட சிறப்பு பெற்றதாகும். தேசிய நெடுசாலையில் (ஆலத்தூர்) இருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது. பெரம்பலூரிலிருந்து 18 கி.மீ தெலைவில் உள்ளது. ஏகாம்பரேஸ்வர்ர் கோவில் மகா கும்பாபிஷேகம் சமீபத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது. மலைகோவிலில் புதியதாக வெள்ளி ரதம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
வாலிகண்டபுரம்
வாலிகண்டபுரம் பெரம்பலூரிலிருந்து வடக்கே 10 கி.மீ தொலைவில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. சரித்திர புகழ் பெற்ற ஊர். இங்குள்ள சிவன் (ஸ்ரீ வாலீஸ்வரர்) கோவில் சோழ மன்னனால் கட்டப்பட்டது. பெரிய அளவிலான இக்கோவில் இன்று தொல்பொருள் துறையின் பராமரிப்பில் உள்ளது. இதில் சுரங்கபாதை போன்ற அமைப்பு உள்ளது.
திருச்சியை ஆண்ட முகம்மது அலி மற்றும் ஆங்கிலேயர்கள் ஒரு அணியாகவும், பிரெஞ்சு மற்றும் ஆற்காடு நவாப் சந்தா சாஹிப் மற்றொரு அணியாகவும் கி.பி. 1751-ல் போரிட்ட இடந்தான் வாலிகண்டபுரம். இங்கு முகாமிட்டிருந்த ஆங்கிலேயர்களின் தளபதிக்கும், படையினருக்கும் மற்ற சிலருக்கும் தொற்றுநோய் ஏற்பட்டு இறந்த்தினால் இங்கு அடக்கும் செய்யப்பட்டு நினைவு கம்பமும் எழுப்பப்பட்டுள்ளது. இராமாயண காலத்தில் இராமர் இலங்கைக்கு செல்லும் வழியில் இந்த இடத்தில் வானர தலைவன் வாலியை கண்ட (கொன்ற)தினால், இவ்விடம் வாலிகண்டபுரம் என பெயரெடுத்தது.
ரஞ்சன்குடி கோட்டை என்பது நெடுஞ்சாலை 45-ல் வாலிகண்டபுரத்திலிருந்து 4 கி.மீக்குள் உள்ளது. பெரம்பலூரில் இருந்து 18கி.மீ தூரத்தில் உள்ளது. இக்கோட்டை தற்போது மத்திய அரசின் தொல்பொருள் துறையின் பராமரிப்பில் உள்ளது. ஆற்காடு நவாப் செஞ்சியை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்த போது, இப்பகுதி அவரின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தது.அவரின் பிரதிநிதியாக ஆட்சி புரிந்த சுல்தான் ஜாகிர்தார் என்பவர் 17-ம் நூற்றாண்டில் இக்கோட்டையைக் கட்டினார்.
துறைமங்கலம்
இந்த ஊர் பெரம்பலூர் நகராட்சியின் எல்லைக்கு உட்பட்டது. தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. புதிய பேருந்து நிலையம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தீயணைப்பு நிலையம், அரசு நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, மாவட்ட மத்திய நூலகம், நகராட்சி அலுவலகம், மின்வாரிய அனைத்து அலுவலகங்கள் மற்றும் பல முக்கிய அரசு அலுவலகங்கள், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் இல்லம் போன்றைவைகள் இங்குள்ளன. வெள்ளையர்கள் ஆட்சி காலத்தில் இப்போதுள்ள நெடுஞ்சாலை அலுவலகம், உயர் அலுவலர்கள் தங்கும் விடுதியாக இருந்துள்ளது. இங்குதான் முதன் முதலில் சமையல் எண்ணை தரும் பாமாயில் மரங்கள் மலேசியாவிலிருந்து வரவழைக்கப்பட்டு பயிரிடப்பட்டுள்ளது.
இங்குள்ள ஸ்ரீ ஆலந்துறை அம்மன் கோவில் மிக சிறப்பு வாய்ந்தது ஆகும். தமிழகத்தில் புகழ் பெற்ற ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் இருப்பிடம் இங்கு உள்ளது. இது தற்போது ஆலயம் போல் சிறப்பாக பராமரிக்கப்படுகிறது. ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் தமிழில் எழுதிய சுமார் 27 புத்தகங்கள், வெண்பாக்கள் தமிழ் இலக்கிய, ஆன்மீக உலகில் புகழ் பெற்றவை. மூல சிறப்புகளையும், வரங்களையும் பெற்றிருந்த சுவாமிகள் இங்கு வாழ்ந்தது இப்பகுதிக்கு கிடைத்த பெருமையாகும். இவர் எழுதிய நூல்களாவன : 1. நன்னெறி, 2. நால்வர் மணிமாலை 3. சோன சைல மாலை 4. கூவ புராணம், 5.பழமலை அந்தாதி, 6. பிட்சாடன் கலித்தொகை, 7. பிரபுலிங்க லீலைக்கு விருந்தியுரை, 8. பிட்சாடன் நவ மணிமாலை, 9. பெரிய நாயகியம்மை விருத்தம், 10.பெரிய நாயகி அம்மன் கட்டளை கலித்தொகை, 11. வேதாந்த சூடாமணிமாலை, 12. சிவப்பிரகாச விகாசம், 13. திருவெங்கை அலங்காரம், 14. திருவெங்கை கலம்பகம், 15. திருவெங்கை யுலா, 16. திருவெங்கை கோவை, 17.திருச்செந்தூர் நீரோட்டகயமக அந்தாதி, 18.யேசுமத நிராகரணம் மேலும் பல நூல்கள் விபரம் கிடைக்கவில்லை.
சாத்தனூர்
இந்த சின்னஞ் சிறிய கிராமம் இந்திய அளவில் மட்டுமல்ல, இன்று உலக அளவில் புகழ் பெற்றுவிட்டது. அனைத்து நாடுகளிலும் உள்ள உலக புவியியல் ஆராய்சியாளர்கள் இங்கு வரவழைக்கும் விஷயம் எது என்றால், ஒரு கல் மரம்தான். ஆம்… முழுவதும் கல்லிலான மரம். யாரும் இதை செதுக்கவில்லை.
இயற்கை நமக்கு தந்த கொடை 10 லட்சம் ஆண்டுகளுக்கு முன் நான்கு கடல்கோள் நிகழ்வுகள் பூமியில் நடந்தன. கடைசியாக நடந்த பிரளயத்தில் கடல் பகுதி நிலமாகவும், நிலப்பகுதி கடலாகவும் மாறின. அதன் படி சாத்தனூர் கொளக்கானத்தம் பகுதிகள் கடலுக்குள் இருந்து வந்தது. பிரளயத்தின் போது பல கடல் பகுதி மேடுதட்டி அரிய கடல் பொக்கிஷங்கள் நமக்க கிடைத்தன. அதில் தலையாயது இந்த கல்மரம் தான். நமது பாரதம் மற்றும் தமிழகம் எவ்வளது தொண்மையான பூமி என்பதின் நேரடி சாட்சி இதுவாகும்.
கொளக்காநத்தம்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியத்தில் உள்ள ஒரு சிறப்பு மிக்க ஊராகும். பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் இவ்வூர் வரை கடல் விரவி கிடந்ததாக உலக வரலாறு கூறுகிறது. இன்றும் இப்பகுதியில் நஞ்சை நிலங்கள் குறைவு. மிளகாய், பருத்தி போன்ற மானாவாரி பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இவ்வூரை சுற்றி பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் ஜிப்சம், கிளிஞ்சல்கள் போன்ற தாது பொருட்கள் கிடைக்கின்றன.
பரந்த விரிந்த பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலம் விவசாயத்திற்கு ஏற்புடையதாக இன்றி, கடலாக இருந்ததன அடையாளங்களோடு, மேடும் பள்ளமுமாக அமெரிக்காவின் புகழ்பெற்ற கிராண்ட் கேனியன் (Grand Canion) இடம் போல உள்ளது. சினிமா துறையினர் வந்து படம் எடுத்து செல்கின்றனர். சிமெண்ட் போன்ற பல ஆலைகளுக்கு தாது பொருட்கள் வெட்டி எடுக்கப்படுகிறது. கடலுக்கு அடியில் கிடைக்கும் தாது பொருட்கள் இன்றும் இங்கு ஏராளமாக கிடைக்கிறது.
எறையூர்
சின்னாறு அருகில் உள்ள ஊராகும். தேசியநெடுஞ்சாலை அமைந்துள்ளது. பெரம்பலூருக்கு தொழுதூருக்கும் இடையில் அமைந்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தின் முதல் சர்க்கரை ஆலை (அரசு கூட்டுறவு நிறுவனம்) ஜவர்ஹர்லால் நேரு சர்க்கரை ஆலை என்ற பெயரில் கடந்த 30 ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி வருகிறது. தற்போது கூடுதல் சிறப்பாக இவ்வூரில் 3500 ஏக்கர் பரப்பளவில் சிறப்பு பொருளாதார மண்டலம் இங்கு அமைக்கபட உள்ளது. அதற்கான நிலம் முழுவதும் கையகபடுத்தப்பட்டுள்ளது.
செங்குணம்
செங்குணம் கிராமம் பெரம்பலூரிருந்து 8 கி.மீ தொலைவில் (தேசிய நெடுஞ்சாலையில்) பிரிந்து செல்கிறது. இங்குள்ள சிவன் கோவில் குலோத்துங்க சோழ மாமன்னனால் கட்டப்பட்டது. இன்றும் சில கல்வெட்டுகள் அங்குள்ளன. இன்று பழங்கால இலக்கிய ஓலைச்சுவடிகள் நமக்கு அரிய பொக்கிஷங்களாக கிடைத்துள்ளது.
மலையாளப்பட்டி
பெரம்பலூர் மாவட்டத்தின் மிக செழிப்பான ஊர் இது வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூர் அருகில் உள்ளது. புகழ் பெற்ற பச்சைமலையில் அமைந்துள்ளது. 120 அடி உயர சின்ன முட்லு அனைக்கட்டு கட்ட தகுதியான இடம் என்று ஆய்வு செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட இடம். இயற்கை எழில் கொஞ்சும் இடம். வருடம் முழுவதும் பசுமை மாறா பகுதியாகும். அடர்ந்த வனம் (Govt. Reserve Forest) நிறைந்த மலைப்பகுதி, சிறு சுற்றுலா (Picnic) செல்ல சிறந்த இடம். இன்றும் பழங்குடியினர் வசிக்கும் அழகான இடமாகும். அழகிய இயற்கை நீருற்றும் உண்டு. மலையின் மறு பகுதி சேலம் மாவட்டம் சேர்வராயன் மலைத் தொடரும், நாமக்கல் மாவட்ட கொல்லிமலையும் இணைந்த்தாகும். இந்த ஊரில் ஒரு கிழங்கு மில் (Sago Factry) உள்ளது. இங்கு ஓடும் ஆற்றின் பெயர் கல்லாறு.
கரைவெட்டிபுதூர்
இது உலக புகழ் பெற்ற பறவைகள் சரணாலயமாகும். வருடந்தோறும் குறிபிட்ட பருவ காலத்தில் லட்சக்கணக்கான விதவிதமான பறவைகள் இங்கு வந்து இனப்பெருக்கம் செய்கின்றன. இங்குள்ள ஏரியில் அதற்கான சீதோஷ்ண நிலை அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஐரோப்பா போன்ற பல கண்டங்களில் இருந்து பல விதமான பறவைகள் வருகின்றன.
பரவாய்
குன்னம் வட்டத்தில் உள்ளது. இந்த கிராமத்தில் ஏராளமான புத்தர் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. கி.பி 11 முதல் 16-ம் நூற்றாண்டு வரை தமிழ் நாட்டில் பௌத்த மதம் வேறூன்றி இருந்த்து. பல்லவர்கள் ஆட்சி காலத்தில் இம்மதம் பெரம்பலூர் மாவட்டத்திலும் இருந்துள்ளதன் சாட்சிதான் இங்கு காணப்படும் புத்தர் சிலைகள் இன்றும் இது வழிபாட்டுக்குடையதாக உள்ளது. கி.மு 3-ம் நூற்றாண்டில் பரவாய்க்கு அருகில் பெரம்பலூர் – அரியலூர் சாலையில் பேரளிக்கும் அடுத்துள்ள, (பேரளி வரை பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்புவரை கடல் இருந்ததற்கான அடையாளங்கள் இன்றும் உண்டு) 8 கி.மீ தொலைவில் உள்ள சித்தளி என்றழைக்கப்படும் இன்றைய கிராமத்தில் பிறந்த சீத்தலை சாத்தனார் எழுதிய நூல்தான், பௌத்த சமய செய்திகள் உள்ளடக்கிய மணிமேகலை காவியம்.
வெங்கனூர்
பெரம்பலூர் – ஆத்தூர் சாலையில் 15 கி.மீ தொலைவில் உள்ளது. சிறிய கிராமத்திற்கு பெரிய வரலாறு உண்டு. இங்குள்ள ஸ்ரீ விருத்தகிரீஸ்வரர் ஆலயம் மிகவும் புகழ் பெற்றது. திருவாரூர் தேர் அழகு, காஞ்சி வீதியழகு, வெங்கனூர் வேலை (சிற்ப) அழகு என்ற பழந்தமிழ் பாடலும் உண்டு. குறு நில மன்னர் ஸ்ரீ அண்ணாமலை ரெட்டியார் பெரும் சிவ பக்தர். அவர் கனவில் இறைவன் தோன்றி வெங்கனூரில் ஒரு ஆலயம் எழுப்ப ஆணையிட்டார். அவ்வாறே செயல்பட்டு அவர் எழுப்பிய ஆலயம் தான் இன்றும் சிற்ப கலையின் பெருமையை பறைசாற்றிக் கொண்டு உள்ளது. இங்கிருந்து விருத்தாஜலத்திலுள்ள ஸ்ரீ விருத்தகிரீஸ்வரர் ஆலயம் வரை சுரங்க பாதை ஒன்று இருந்த்தாக சொல்வர். அனைவரும் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டிய ஆலயம்.
லப்பைக்குடிகாடு
விஸ்வகுடி, முகமது பட்டினம், வி.களத்தூர் என இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் ஊர்கள் பல இருந்தாலும், அதிலெல்லாம் தலையாயதும், மிக பெரியதுமான ஊர் லப்பைக்குடிகாடு ஆகும். இது ஒரு நகர பஞ்சாயத்து. வெளிநாட்டு பொருட்கள் விற்பனையில் தமிழகத்தின் பல நகரங்களிலும் இன்று பிரபலமாக விளங்கும் பர்மா பஜார்களுக்கு அக்காலம் முதல் இன்று வரை அடித்தளமாகவும், ஆதாரமாகவும் விளங்குவது இவ்வூராகும்.
து.களத்தூர்
பெரம்பலூர் – துறையூர் சாலையில், துறையூருக்கு மிக அருகாமையில் இவ்வூர் உள்ளது. இங்குள்ள சையது முஸ்தபா அவுலியா தர்கா மிகவும் புகழ் பெற்றது, இங்கு வருடம்தோறும் நடைபெறும் சந்தனக்கூடு திருவிழாவில் பெருமளவிளான இஸ்லாமியர்கள் மட்டுமல்ல, சுற்றி உள்ள ஊர்களில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான இந்துக்களும் கலந்து கொள்வது பெருமைக்குரியதாகும்.
திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, நாகப்பட்டினம் போன்ற பல மாவட்டங்களிலிருந்து மக்கள் வந்து வணங்கிச் செல்வர். நாகூர் தர்காவிற்கு அடுத்து இங்கு நடக்கும் திருவிழாதான் சிறப்பு வாய்ந்த்து. இது 400 ஆண்டிகளுக்கு முற்பட்டதாகும்.
வடகரை – மாவிலிங்கை
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்தில் உள்ள இவ்வூரில் மிகவும் புகழ் பெற்ற அருள்மிகு ஸ்ரீ படைவெட்டி அம்மன் திருக்கோவில் உள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக மக்களால் போற்றி வணங்கப்படுகிறது.
[/vc_column_text][/vc_column][/vc_row]